ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.
ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.
Less